What's new

வைரமுத்துவின் கவிதைகள்

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 0
M

Mathangi

Guest
வைரமுத்துவின் - அம்மா கவிதை.....


ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறு மொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும்

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்
உன் ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்தமாயிருச்சே!

வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரை சேத்து விட்டவளே!
 
M

Mathangi

Guest
வைரமுத்துவின் - காதலித்து பார்......

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...

ராத்திரியின் நீளம் விளங்கும்....
உனக்கும் கவிதை வரும்...
கையெழுத்து அழகாகும்.....
தபால்காரன் தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்...
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சஹாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக உன்னால் முடியுமா?
அஹிமசையின் இம்சையை அடைந்தது உண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
சபையை தனிமையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம் அடையவேண்டுமா?
ஐந்தங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்...

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

சம்பர்தாயம் சட்டைபிடிதாலும்,
உறவுகள் உயிர் பிடிந்தாலும்,
விழித்து பார்க்கையில்
உன் தெரு களவுபோய் இருந்தாலும்,
ஒரே ஆணியில் இருவரும்
சிக்கன சிலுவையில் அரையபட்டாலும்,
நீ நேசிக்கும் அவனோ, அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்,
காதலித்து பார்!

சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம் ..
காதலித்து பார் ..............
 
Last edited by a moderator:
Top