What's new

உயிருள்ளவரை உஷா

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
This one is copied from one of a senior Sir post, i felt it's relevant to this valentine's day.
உயிருள்ளவரை உஷா..
--------------------------------------------
இரு புறமும் வாய்க்கால்கள்..
ஊருக்கு வெளியே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பாதை அது..
குறுகிய அந்தப் பாதையில் டிவிஎஸ் பைக் வேகமாய் போய்க் கொண்டிருந்தது..
என் பின்னே, என் முன்னாள் மாணவன் அமர்ந்திருந்தான்..
ரியர்வியூ கண்ணாடி வழியே பார்த்தேன்.. அவன் மிகவும் பதட்டமாக இருந்தது நன்றாகத் தெரிந்தது..
கண்களில் கண்ணீர்த் துளி ததும்பி நின்றது..
என்னவாக இருக்கும்?
சற்று நேரத்திற்கு முன்புதான் என்னைப் பார்க்க வந்திருந்தான்..
சார்..
ஹேய் வாப்பா.. எப்படியிருக்க?
என் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாய் நின்று கொண்டிருந்தான்..
ஹேய்.. மறுபடியும் அழைத்தேன்..
நிமிர்ந்து பார்த்தான்.. கண்கள் கலங்கிப் போயிருந்தன..
எழும்பி வேகமாய் அவனருகில் சென்று தோளைத் தொட்டு அமைதிப்படுத்தினேன்..
என்னடா.. எதுவும் பிரச்சனையா?
சார்.. ஒரு ஹெல்ப் வேணும்..
சொல்லுடா.. பணம் எதுவும் வேணுமா?
இல்லை சார்.. உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..
என் அலுவலகத்தில் நான் மட்டும்தான் இருந்தேன்.. வேறு ஒருவரும் இல்லை.. அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னேன்..
வேகமாய் தலையசைத்து மறுத்தான்.. இங்க வேணாம் சார்.. வெளியே எங்கேயாவது போகலாம் சார்..ப்ளீஸ்..
வெளியேயா? சற்று யோசித்தேன்..
ம்.. சரி வா.. வீட்டுக்கு போகலாம்..
இல்லை..இல்லை.. அங்க வேணாம் சார்..
வேற?
வெளியே எங்கேயாவது சற்று தள்ளி போகலாம் சார்..
ம்.. சரி வா.. என்றவாறு என் வண்டியை வெளியே எடுத்தேன்..
பைக் வேகமாய் சென்று கொண்டிருந்தது..
அவன் என் முன்னாள் மாணவன்தான்.. அவன் குடும்பம் எனக்கு மிகவும் அறிமுகமானதுதான்..
பணம் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.. ஆகவே பணப் பிரச்சனை இல்லை..
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு 19 வயது வாலிபன் கண் கலங்கி நிற்கும் அளவிற்கு வேறு என்னதான் பிரச்சனையாக இருக்கும்?
கல்லூரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டானா?
எதாவது போலீஸ் கேஸ்?
வாலிபக் கோளாறு?
யோசிக்க யோசிக்க மண்டைக்குள் ஒன்றும் ஓடவில்லை..
சடக்கென்று வண்டியை நிறுத்தி,
இறங்கு..என்றேன்..
இறங்கியவன் சுற்றுமுற்றும் பார்த்தான்.. ஒருவரும் இல்லாத வனாந்திரம்..
சொல்.. என்ன உன் பிரச்சனை?
சார்..ம்..
தயங்கி தயங்கி நின்றான்...
விசயத்தைச் சொல்லியதும், ஒருவேளை பளாரென்று அவனை அடித்து விடுவேனோ என்று என்னைக் குறித்துப் பயந்தது அவன் கண்களில் பளிச்சென்று தெரிந்தது..
அமைதியாக நின்றேன்..
தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான்...
மறுபடியும் ஒருமுறை யாராவது அங்கே தென்படுகின்றார்களா என்பதைப் பார்த்துக் கொண்டான்...
சார்,
ம்.. சொல்லு..
நான் ஒரு பெண்ணைக் காதலிக்கின்றேன்..
..

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசிக்கொண்டிருந்த சாரல் காற்று வேகமாய் வந்து முகத்தில் பளாரென்று அடித்தது..

அந்தக் குளுமையை ரசிக்க முடியவில்லை..

உள்ளுக்குள் வியர்த்தது...

பயபுள்ள .. ஒருவேளை இழுத்துக் கொண்டு ஓடிப்போய் திருமணம் எதுவும் செய்திருப்பானோ.. என்று சட்டென்று தோன்றியது..

அடப்பாவி.. கெடுத்தானே காரியத்தை என்று உள்ளம் பதறியது..

ஆனாலும் ஒன்றையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.. மௌனமாக நின்றேன்..

..

அவனும் மௌனமாக நின்றான்..

சரி.. காதலித்துவிட்டாய்.. அதில் என்ன பிரச்சனை இப்போது..? உன் வயதிற்கு இணையான அல்லது குறைவான பெண்ணைத்தானே காதலித்திருப்பாய்? எனில் அவளுக்கும் 18 அல்லது 19 வயதுதானே இருக்கும்?

இந்த வயதில் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய நெருக்கடி எதுவும் அந்தக் குடும்பத்திற்கு வந்திருக்காது..

ஆகவே திருமணம் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கின்றதே..

எனில்.. வேறு என்ன பிரச்சனை?

இல்லை சார்.. நேற்று அவள் கல்லூரிக்கு அவளைப் பார்க்கப் போயிருந்தேன்..

சரி..

பார்த்துவிட்டு அவளையும் அழைத்துக் கொண்டு பைக்கில் ஊர் சுற்றினேன்..

..

அதை அவளுக்கு வேண்டியவர்கள் பார்த்துவிட்டார்கள்.. அவளது அப்பாவிடம் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.. பிரச்சனையாகுமோ என்று பயமாய் இருக்கிறது..

எனக்கு வேறு வழி எதுவும் தெரியலை.. நீங்கதான் வேறு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. சொல்லிவிட்டு தலை குனிந்து நின்றான்..

..

பிள்ளையின் தகப்பனாருக்குத் தெரிந்துவிட்டது.. எப்படியும் அவர் ஆள் வைத்து அடிக்க வருவார்.. அல்லது வீட்டிற்காவது வந்து பிரச்சனை செய்வார்..என்று தோன்றியதன் விளைவாகத்தான் இதை வந்து என்னிடம் சொல்லித் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியிருக்கின்றது..

முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்...!

பிள்ளையின் தகப்பனாருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றால்.. இந்தப் பஞ்சாயத்தும் என்னிடம் வந்திருக்காது.. மைனர் அடுத்த ரவுண்டுக்கு பைக்கைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் அந்தக் கல்லூரி வாசலுக்கேப் போயிருப்பார்..

19 வயது..

அவனுக்கு அண்ணன் ஒருவன் இருக்கின்றான்.. சகோதரி ஒருவள் இருக்கின்றாள்..

எல்லோரும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள்..

பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டு, பெற்றோர்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க, பிள்ளைகள் காதலில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்..

இது வரமா அல்லது சாபமா?

உனக்கும் ஒரு சகோதரி இருக்கின்றாளே.. அவளும் உன்னைப் போல் வேறு எவன் பைக்கிலாவது ஊர் சுற்றப் போனால்.. அதையும் நீ மகிழ்ச்சியாகத்தான் ஏற்றுக் கொண்டிருப்பாயா என்று கேட்க வார்த்தைகள் தொண்டைக்குழி வரை வந்தது..

விழுங்கிக் கொண்டேன்..

வயசுக் கோளாறு...

அது 1987ம் வருடம்..

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

உயிருள்ள வரை உஷா என்ற திரைப்படம் அப்போது வெளியானது..

திரையிட்ட இடங்களிலெல்லாம் மக்கள் அமோக வரவேற்பைக் கொடுத்தார்கள்..

அந்தப் படத்தில்தான் "நளினி" என்ற நடிகை கதாநாயகியாக அறிமுகம் ஆனார்..

என்னோடு உடன் படித்த 15 வயது நண்பனுக்குத் திரையில் நளினியைப் பார்த்ததும் பிடித்துப் போனது.., நளினியின் மீது காதல் கொண்டான்...

உஷாதான் அந்தப் படத்தில் நளினியின் கதாபாத்திரப் பெயர் என்பதால், இவன் தன் கையில் உஷா என்று பச்சைக் குத்திக் கொண்டான்...

அவ்வளவு தீவிரமாக அந்த நடிகையைக் காதலித்தான்..

வீட்டுக்குப் போனதும் பச்சை குத்தியதைப் பார்த்து, அவன் அப்பா தூக்கிப் போட்டு மிதித்தார்...

அவன் அசரவேயில்லை..

பின்னாட்களில் அதே நளினியை ராமராஜனும் காதலித்து, ஒருவருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்...

நண்பன் உஷா என்று பச்சை குத்தியதை மாற்ற முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தான்..

முடியவில்லை..

நண்பன் அசரவில்லை.. அடுத்தபடியாக நடிகை சீதாவைக் காதலிக்க ஆரம்பித்தான்..

அந்த சீதாவும் பார்த்திபனைக் காதலித்தார்.. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணமும் செய்து கொண்டார்..

என்னவாயிற்று..?

நளினியும் ராமராஜனோடு சேர்ந்து வாழவில்லை..

சீதாவும் பார்த்திபனோடு சேர்ந்து வாழவில்லை..

அன்றைக்குப் பூத்துக் குலுங்கிய காதல் என்னவாயிற்று..?

ஹார்மோன் வேலை முடிந்ததும் கசந்து குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டது..

நண்பனோ இப்போது படித்து முடித்து வாத்தியாராகிவிட்டான்..

ஒருவேளை நளினியே திடுதிடுப்பென்று இப்போது வந்து அவன் முன்பு நின்றால்.. என்ன செய்வான்?

கற்பனை செய்து பாருங்கள்...

பின்னங்கால் தலையில்பட அய்யய்யோ என்று ஓடி விடுவான்..

நீயே என் உயிர் என்று அன்றைக்கு உருகி உருகிக் காதலித்த காதல் இன்றைக்கு என்னவாயிற்று..?

பச்சை குத்தியதை அழிக்க முடியாதே...

ஆகவே உஷா என்ற பெயரில் இருக்கும் ஒரு பெண்ணை ஊர் ஊராகத் தேடியலைந்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து தப்பித்துக் கொண்டான்..

அவ்ளோதான் காதல்...

பப்பிக் காதல்...

ஆண் பெண் நட்பு இந்தியாவில் இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை..

ஒரு ஆண் இன்னொரு பெண்ணோடு பேசவே கூடாது என்பதுவே வரையறுக்கப்படாத சட்டமாக இங்கு நடைமுறைப்படுத்தப்படுவதினாலேயே..

ஒரு பெண் ஆணைப் பார்த்துவிட்டாலே.. அல்லது பார்த்து சிரித்துவிட்டாலே.. அல்லது ஒரு குறிப்பேடைப் பரிமாறிக் கொண்டாலே அதுதான் காதல் என்று இளைஞர்கள் முடிவு செய்துவிடுகின்றார்கள்..

இதில் இன்றைய ஆஃப்பாயில்ட் திரைப்படங்கள் வேறு..

பெண்ணின் விரல்கள் ஒரு ஆணின் மீது பட்டுவிட்டாலே போதும், வெள்ளையுடை தேவதைகள் ல..ல்..ல..ல்.லா..என்று லாலி வேறு பாட ஆரம்பித்துவிடுகின்றார்கள்...

இங்கு பெண்ணோடு பேசுவதே இளைஞர்களுக்கு வரம்..என்றாகிப் போய்விட்டது..

அதனால்தான் அந்த வரம் கிடைக்க இவர்கள் தவமாய் தவமிருக்க வேண்டியதாகிவிடுகிறது..

இதுவெல்லாம் ஹார்மோன்கள் செய்யும் வேலைதான் என்பது ஒருவருக்கும் புரிவதேயில்லை..

இன்றைய உலகம், நாளையும் இயங்க வேண்டும் என்றால்.. ஆணும் பெண்ணும் இணை சேர்தல் என்பது இடையறாது இங்கு நடைபெற்றுக் கொண்டேயிருக்க வேண்டும்..

அதன் பொருத்தே.. ஆணுக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களும், பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன்களும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றது..

அதனால்தான் பெண்ணின் மீது ஆணுக்கும், ஆணின் மீது பெண்ணுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது..

அந்த ஈர்ப்பைத்தான் இளவயதில் காதல் என்று முடிவு செய்து கொள்கின்றோம்..

பெண்ணின் வாசனையும் அவளின் அருகாமையும் எந்த ஒரு ஆணையும் நிலை குலைய வைத்துவிடுகிறது..

தன் எதிர்காலத்துக்கு எது சரி.. என்பதைக்கூட நினைக்க விடாமல் சதி செய்துவிடுகிறது அந்த ஹார்மோன்கள்..

சாப்பிடவிடாது..
தூங்கவிடாது..
படிக்க விடாது..
மாமலையையும் கடுகாய் பார்க்க வைக்கும்..

பிணந்திண்ணிக் கழுகாய்
அங்குமிங்கும்
பேயாய் அலைய வைக்கும்...

அந்தக் காதலுக்காக பெற்றவர்களையும் தூக்கி எறியவும் தயாராகிவிடுகிறது மனம்..

தன் தாய் என்ன நினைப்பாள்..
தகப்பன் என்ன நினைப்பான்..
தாயைப் பற்றியும் தகப்பனைப் பற்றியும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையெல்லாம் யோசிக்கவிடாது..

எதிர்த்தால், அந்தக் காதலுக்காகத் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ளவும் துணிந்துவிடுகிறது..

காதல் குளத்தில் முங்கிக் குளித்தவன் தலை நிமிர்ந்து பார்க்கும் பொழுது, கல்லூரியில் அரியர்தான் மிச்சமிருக்கும்..

கலெக்டராக வேண்டியவனைக் குப்பைக் காகிதம் பொறுக்க வைத்திருக்கும்...

அதுவா காதல்?



1676222250013.jpg
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
அதுவல்ல காதல்..

காதல் என்பது நம்பிக்கை..

இவன் தன்னைக் காலமெல்லாம் கடைசி வரைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வான் என்று ஒரு ஆணின் மீது வர வைக்கின்ற நம்பிக்கை..

அந்த நம்பிக்கை திருமணத்தில் இணையும் பொழுது, அது ருசிக்கும்..

அந்த நம்பிக்கை வருவதற்கு, ஆணைப் பற்றி பெண்ணுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்..

அது தெரிவதற்கு முன்னாலேயே..

பார்த்ததும் காதல்,
தொட்டதும் காதல்..
குரைத்ததும் காதல்..
என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காய்..

கறிக்கு உதவாது..

இங்கு யாரும் காதலுக்கு எதிரியல்ல..

படிக்க வேண்டிய வயதில் நன்றாகப் படியுங்கள்..

22 வயதில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்னவாகப் போகின்றீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்..

நல்ல அதிகாரியாகவோ..
நல்ல மருத்துவனாகவோ..
நல்ல பொறியாளராகவோ..
நல்ல தொழிலதிபராகவோ..

உங்களை 24 வயதிற்குள் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்...

உங்கள் சம்பாத்தியத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்களே 50 பவுன் நகை போட்டு வீட்டுக்குக் கூப்பிட்டு வரும் அளவிற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..

அவ்வளவே..

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் நன்றாகக் காதலியுங்கள்..

சரியாகத் தெரிந்தால் அவளையேத் திருமணம் செய்து கொள்ளுங்கள்..

இது நவீன காலம்..

எல்லா இலக்கணங்களும் மாறி விட்டது..

ஒரு ஆண்..இன்னொரு ஆணையும்..

ஒரு பெண்.. இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்வதையே அங்கீகரிக்கத் துவங்கிவிட்டது..

டேட்டிங்..
லிவ்விங் டுகெதர்..

எல்லாம் சகஜமாகிவிட்டது..

அப்படிப்பட்ட காலத்தில் போய்.. ஹார்மோன்களுக்குப் பின்னால் அலைந்து உங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்ளாதிருங்கள்..

மனதில் பூக்கின்ற பூக்களையெல்லாம் பூமாலைகளாக்கிவிடாதிருங்கள்..

சிலசமயம் காகிதப் பூக்களும் அங்கே இருக்கக்கூடும்...

காத்திருங்கள்..

வண்ணத்துப் பூச்சி அழகானதுதான்.. அதை ரசித்திடுங்கள்.. தவறில்லை..

ஆனால் அதைப் பிடித்தே ஆக வேண்டும் என்று அதன் பின்னாலேயே ஓடாதீர்கள்..

மூச்சிளைக்கும்..

முட்டு வலிக்கும்..

கால் இடறிக் காயம் ஏற்படும்..

அதைவிட,

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஏராளமாய் செடிகளை நட்டு வைத்திடுங்கள்..

ஒன்றல்ல.. இரண்டல்ல.. நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் உங்களைத் தேடி வரும்..

காத்திருங்கள்..

இப்படியெல்லாம் என் முன்னாள் மாணவனுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..

ஆனால் சொல்லவில்லை..

காதலுக்குக் கண்ணும் இல்லை.. காதும் இல்லை..

எது சொன்னாலும் கேட்காது..

கேட்டாலும் புத்திக்கு எட்டாது..

..

அவன் கண்களையே ஒரு நிமிடம் பார்த்தேன்..

சரி போ.. நடந்தது நடந்துவிட்டது. இனி அதை நம்மால் மாற்ற முடியாது..

உன் வீட்டில் இப்போது எதையும் சொல்ல வேண்டாம்..

பெண்ணின் தகப்பனார் தேடி வந்தால் வரட்டும்.. அதன்பிறகு என்ன செய்வது என்று பார்த்துக் கொள்ளலாம்.. போ.. இப்பொழுது அதையே நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்..

இனியொருமுறை அத்தவறைச் செய்யாதே..

உன்னை வாழ்க்கையில் முதலில் நிலை நிறுத்திக் கொள்.. அதன்பிறகு, அவர்களே உன்னைத் தேடி வருவார்கள்..

நீ இப்போது கல்லூரிக்குப் புறப்படும் வேலையை மட்டும் பார்..

என்று சொல்லிவிட்டு.. பைக்கை மீண்டும் எடுத்தேன்...

விதி வலியது...

உங்களுக்கான உஷாக்கள் ஒருநாள் நிச்சயம் வருவார்கள்..

அதே பெயரோடோ அல்லது வேறு பெயரோடோ..

காத்திருங்கள் அதுவரை..
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
@sita sorry idhu enala tanglish type pana mudila...it's too long...i have an idea...idha copy panitu Google text to speech or third party one try panunga....
 
Top